மழையில் தொலைந்த மஞ்சள் குடை.. Yel(love) umbrella..
தற்செயலான இரண்டாவது சந்திப்பு
CHAPTER 4
அடுத்த இரண்டு நாட்களாக அர்ஜூனின் மனதில் ஒரு விசித்திரமான அமைதி இருந்தது.
பல வருடங்களுக்குப் பிறகு, அவன் யாரையோ நினைத்து சிரித்துக் கொண்டிருந்தான்.
ஆனால், அதே நேரத்தில், அவனுக்குள் ஒரு கேள்வியும் இருந்தது.
" நந்தினியை மீண்டும் சந்திக்க முடியுமா?"
அவளுடைய எண் இல்லை.
சமூக வலைதளத்தில் தேடவும் தோன்றவில்லை.
அவளைப் பற்றி தெரிந்தது ஒன்றே ஒன்று.
அவள் DREAM LIBRARY வேலை பாக்கிறாள்.
அன்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு கிளம்பிய அர்ஜூன், வழக்கத்திற்கு மாறாக பைக்கை நகரத்தின் பழைய பகுதியை நோக்கித் திருப்பினான்.
"சும்மா அந்த வழியா போயிட்டு வரலாம்.." என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
ஆனால் அவனுக்கே தெரியும்.
அவன் யாரைத் தேடி வந்தான் என்று.
நூலகத்தை அடைந்தபோது, கதவு பூட்டப்பட்டிருந்தது.
அவன் சற்று ஏமாற்றத்துடன் நின்றான்.
அந்த நேரத்தில் அருகிலிருந்த ஒரு சிறிய காபி கடையிலிருந்து பழக்கமான் சிரிப்புச் சத்தம் கேட்டது.
திரும்பிப் பார்த்தான்.
அங்கே...
நந்தினி.
இரண்டு சிறுவர்களுடன் சிரித்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தாள்.
சில நொடிகள் அவளைப் பார்த்துக்கொண்டே நின்றான்.
அவனைப் பார்த்த நந்தினியின் முகத்தில் ஆச்சரியம் தெரிந்தது.
"ஹேய் ! நீங்களா?"
அர்ஜூன் சிரித்தான்.
"ஆமாம்.... இங்க ஒரு வேலை."
"நிஜமாவா? இல்ல... நூலகம் பூட்டியிருக்கிறதா என்று பார்க்க வந்தீங்களா?
அவள் கிண்டலாகக் கேட்டாள்.
அர்ஜூன் உடனே பதில் சொல்ல முடியாமல் சிரித்தான்.
"சரி.... நான் உங்ககிட்ட தப்பா எதும் கேட்டுடேனா?"
"இல்ல... அப்படி எதுவும் இல்லை."
அவள் சிரித்தாள்.
அந்த சிரிப்பு ஏனோ அவனுக்கு பிடித்திருந்தது.
"நான் குழந்தைகளுக்கு புத்தகம் கொடுத்துட்டு வந்தேன். இப்போதான் கிளம்பப் போறேன்."
அந்த இரண்டு சிறுவர்களும் அவளிடம் கையை அசைத்துவிட்டு சென்றனர்.
"நீங்க காபி குடிப்பீங்களா?" என்று தீடீரென்று கேட்டாள் நந்தினி.
"இப்பவா?"
"ஏன் ? இப்போ காபி குடிக்கக்கூடாதா?"
அவளின் குழந்தைத்தனமான முகபாவனையப் பார்த்து அர்ஜூன் சிரித்துவிட்டான்.
"சரி."
இருவரும் காபி கடைக்குள் சென்றனர்.
சில நிமிடங்கள் அமைதியாக இருந்தது.
பிறகு நந்தினியே பேச்சை ஆரம்பித்தாள்.
"உங்களுக்கு புத்தகம் படிக்க ரொம்ப பிடிக்குமா?"
"கொஞ்சம்."
"கொஞ்சமா? உங்க முகம் பார்த்தா ரொம்ப SERIOUS READER மாதிரி தெரியுது,"
"என் முகம் அவ்வளவு பயங்கரமா இருக்கு?"
"இல்ல... எப்பவும் யோசிக்கிற மாதிரி இருக்கு."
அந்த வார்த்தை அர்ஜூனை சில நொடிகள் அமைதியாக்கியது.
அவள் சரியாகத்தான் சொன்னாள்.
அவன் எப்போதும் ஏதோ ஒன்றைப் பற்றி யோசித்துக்கொண்டே இருப்பான்.
அதை உணர்ந்த நந்தினி உடனே பேச்சை மாற்றினாள்.
"சரி... உங்களுக்கு பிடிச்ச புத்தகம் எது?"
அந்த ஒரு கேள்வி, இருவருக்கும் இடையிலிருந்த தூரத்தை மெதுவாகக் குறைக்க ஆரம்பித்தது.
புத்தகங்களைப் பற்றி பேச ஆரம்பித்த அவர்கள், நேரம் போவதையே கவனிக்கவில்லை.
வெளியே இருள் சூழ ஆரம்பித்திருந்தது.
"அய்யோ! நேரம் ஆகிடுச்சே!" என்று நந்தினி எழுந்தாள்.
"நான் கிளம்பனும்."
"சரி."
அவள் புன்னகைத்தாள்.
"அர்ஜூன்..."
முதல் முறையாக அவள் பெயரை அழைத்தாள்.
"என்ன?"
"அந்த நாள்ல புத்தகத்தை எடுத்துக்கொண்டு போகவில்லையேன்றால், நாம இப்படி பேசிக்கொண்டிருக்க மாட்டோம் இல்ல?"
அர்ஜூன் சில நொடிகள் அமைதியாக இருந்தான்.
பிறகு மெதுவாகச் சொன்னான்.
"சில சந்திப்புகள்.... காரணம் இல்லாம நடக்காது."
அவள் சிரித்தாள்.
"அப்படியா?"
"ஆமாம்."
நந்தினி தலையசைத்தாள்.
"அப்போ.... மீண்டும் சந்திப்போம்."
அவள் அங்கிருந்து நடந்துச்சென்றாள்.
அவள் சென்ற பாதையயைப் பார்த்துக் கொண்டே நின்ற அர்ஜூனின் உதடுகளில் அவனுக்கு அறியாமல் ஒரு பன்னகை மலர்ந்தது.
அவனுக்குத் தெரியவில்லை...
அந்த சாதாரண காபி சந்திப்பு.
அவன் வாழ்க்கையின் மிக அழகான நினைவுகளில் ஒன்றாக மாறப்போகிறது என்பதை.
TO BE CONTINUED....💫

Comments