நினைவலைகள்...
காலை 8 மணி:
இலக்கியா பம்பரமாக சுழன்று கொண்டிருந்தாள்.
காலை டிபன் ,மதியம் சாப்பாடு சமையல் முடித்து கணவன், குழந்தைகள் அனைவரும் அலுவலகம், பள்ளி அனுப்பிவிட்டு "அப்பாடா "என்று அமர்ந்தாள்.
கணவன் அரசு வேலை பார்க்கிறார். அவர் வேலையின் பொருட்டு மாற்றலாகி வேறு ஊர் வந்து ஒரு வாரம் ஆகி விட்டது. இதுவரை சொந்த ஊரிலே அம்மாவின் அருகிலே இருத்தால்.
இப்போது பொள்ளாச்சியில் புது வீடு குடி புகுந்து பொருட்கள் பாதி ஒழுங்கு வைத்து ;பாதி அப்படியே இருந்தது.
எப்போதும் சலிக்காது வேலை பார்த்தவள் இலக்கியா.அதனால் சும்மா இருக்க முடியவில்லை. புத்தக அலமாரி சுத்தம் செய்துவிட்டு புத்தகம் படிக்கலாம் என்று தூசி தட்ட சென்றாள்.
இலக்கியா ஒரு புத்தகப்புழு .அதன் காரணமாக அவள் அம்மா தன்னிடம் உள்ள புத்தக அலமாரியை அப்படியே கொடுத்துவிட்டார்.
கொடுக்கும்போது:
"என் அப்பா எனக்காக கொடுத்தது. அதை கண் போன்று பாதுகாக்க வேண்டும்" கூறியே சாவியை கொடுத்தாள்.
அதில் ஒரு டயரி இருந்தது. அது அவள் அம்மாவின் உடையது. அதிலிருந்து ஒரு காகிதம் கீழே விழுந்தது.
எடுத்து பார்த்தால் காகிதம் துண்டு துண்டாக பலமுறை ஒட்டி வைத்தது போலிருந்தது.
அதை படித்தால்,
அப்பா
" ரொம்ப இனிமையானவர். 4 குழந்தைகள் -மூன்று பெண்; ஒரு ஆண். இரண்டாவதாக பிறந்தவள் நான். அவருடைய உலகமே நாங்கள்தான். அதிர்ந்து பேசியதில்லை; ஆனால் நான் அதையே அவர் திட்டுகிறார் என்று நினைப்பேன். இப்போது புரிகிறது அவர் எனக்கு புரிய வைக்க முயற்சிக்கிறார் என்று. திட்டுவது எல்லாம் வேறு என்று இப்பொழுது புரிந்தது. எனக்கு அதிக படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.ஆனால், அவரால் அப்போது படிக்க வைக்க முடியவில்லை. பெண் குழந்தைகள் வயதுக்கு வந்த பிறகு வெளியே அனுப்பும் பழக்கம் இல்லை ,எங்கள் சமூகத்தில். ஆனால் அதையும் மீறி 10-ஆம் வகுப்பு வரை ஆங்கில மீடியத்தில் படிக்க வைத்தார்.
மேற்கொண்டு படிக்க வேண்டும் என்று அழுது அடம் பிடிப்பேன்; சாப்பிடாமல் இருப்பேன். மௌனமாக போய்விடுவார். அழுதுகொண்டே தூங்கிவிடுவேன். விழித்து பார்க்கும் போது என் தலையணைக்கு அருகில் ஒரு புத்தகம் ஒன்று இருக்கும்.
லைப்ரரியில் இருந்து நாவல் எடுத்து வந்து இருப்பார். நான் பள்ளிக் கல்வியை கேட்டேன். சாண்டிலியன், பொன்னியின் செல்வனில் கல்கி, நா பார்த்தசாரதி, ஜெயகாந்தன்,சாவி, ரமணிச்சந்திரன் என்று புத்தகங்களின் வாயிலாக உலகத்தையே என் கண்முன் கொண்டு வந்தார். அதுவரை நான் கேட்டிராத பெயர்கள் எல்லாம். அவருடைய எழுத்துக்களை, எண்ணங்களை என் கண்முன் கொண்டு வந்தார்.
கற்றுத்தருகிறேன் என்று சொல்லாமலே எனக்கு நிறைய கற்றுத் தந்திருக்கிறார் அப்பா. எல்லா காலகட்டத்திலும் நான் என் கணவரோடும், குழந்தைகளோடும் போராடி வென்றிட அது துணையாய் நின்று இருக்கிறது.
அப்பா எப்போதும் எனக்கு ஸ்பெஷல் தான்.
என்று முடித்திருந்தது.
*****
ட்ரிங்....ட்ரிங்... ட்ரிங்...
அம்மா தான் அழைத்திருந்தார்.
"புது வீடு செட் பண்ணிட்டியா? புத்தகத்துக்கான அடுக்கி பத்திரமா வச்சிருக்கியா"?
"பத்திரமா வச்சிருக்கம்மா. இது உனக்கு எவ்வளவு முக்கியம்னு புரிஞ்சுகிட்டேன். சொல்லி புன்னகைத்தாள்".
தூசி தட்டியது அலமாரியை மட்டுமல்ல அவள் அம்மாவின் நினைவலைகளை...
Comments