புதுமண தம்பதி💝
"யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்.
நாம் வந்த பின்னாலும்
நாம் சென்ற பின்னாலும்
சொந்தமும் பந்தமும் பேரை சொல்லும்".
வேனில் பாடலுக்கு ஏற்ப சிறுவர்கள் அனைவரும் ஆடிபாடி கொண்டாடி வந்தனர். பெரியவர்கள் அனைவரும் அதை ரசித்து மகிழ்ந்து வந்தனர்.
சிவசைலம்
"கோவில் வந்தாச்சு. இறங்குங்க , இறங்குங்க" என்று ஒருவர் கூற அனைவரும் கீழே இறங்கினர்.
சுற்றி பசுமை , இனிமையான தென்றல் வீச சிவநாமம் ஒலிக்கின்றது கோவிலில்.
பரவசத்துடன் நுழைந்தனர் மாப்பிள்ளையும் பெண்ணும்.
மாப்பிள்ளை, பெண்ணும் சிவனையும் அம்பாளையும் தரிசனம் செய்தனர்.
அர்ச்சகர் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் அர்ச்சனை செய்தார்.
கோமாதா பூஜை நடந்தது; பின்பு மற்ற சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து அர்ச்சகர் புது ஆடை கொடுத்தார்.
மாப்பிள்ளை ஜோராக புது ஆடை அணிந்து மணப்பலகையில்
அமர்ந்தார்.
"சீக்கிரம் சீக்கிரம் பொண்ணு கூப்பிடுவாங்க.
மாப்பிள்ளை ரெடி ஆயிட்டாரு " என்று கூட்டத்தில் ஒருவர் கூறினார்.
மணபெண்ணை அலங்காரம் செய்த பெண்களோ கேலி செய்த வண்ணம் அலங்கரித்தனர்.
"போதும்டி விடுங்க.அவங்க ரெடி ஆயிட்டாங்க" என்று சொன்னதும் சிரித்தனர் அனைவரும்.
இவ்வாறு கேலிகளோடு அலங்காரம் முடித்து மணப்பெண்ணும் வந்து அமர்ந்தாள்.
ஐயர் தாலியை கொடுக்க "கெட்டிமேளம்,கெட்டிமேளம்" என்று ஒருவர் கூற
வந்திருந்த பெரியவர்கள் அட்சதை தூவி வாழ்த்தினர்.
மணபெண்ணோ கண்களில் கண்ணீரோடு தாலியை ஏற்கிறாள்.
புதுமண தம்பதியராய் வெட்கம் சூழ
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
"அறுபது ஆண்டுகாலம் ஒன்றாய் வாழ்ந்து பல இன்னல்களையும், மகிழ்ச்சியையும் சந்தித்து நிறை குறைகளை அறிந்தாய். இப்படியே எப்போதும் ஒன்றாய் இருப்போம்" என்று கூறியது அவர்களின் கண்களின் மொழி.
சிறியவர்கள் பெரியோர்களிடம் ஆசிர்வாதம் வாங்கினர்.
அர்ச்சகர் கோவிலுக்கு வந்த பக்தர்களிடம் "அறுபதாம் கல்யாணம் நடந்த பெரியோர் அங்க இருக்காங்க. போய் ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க குழந்தைகளா" என்று கூறினார்.
நிறைந்த மனதோடு ஆசீர்வாதம் செய்தனர் அறுபதாம் கல்யாணம் முடித்த புதுமண தம்பதியர்..
*****
Comments